தூத்துக்குடி : 'போலீசார் என்னை தாக்கினர்'... உயிரிழந்த அருணாச்சலம் கொடுத்த வாக்குமூலம்!

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்த விவகாரத்தில், குடும்பத்தினர் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

Hero Image

தூத்துக்குடி : அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், அரசு மதுபானக் கடை பாரில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 17-ம் தேதி அன்று சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி, தென்பாகம் காவல் நிலையப் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடமிருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்றைய தினமே (17-ம் தேதி) மாலையில், கடுமையான காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அருணாச்சலம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலத்தைத் தென்பாகம் காவல் நிலையப் போலீசார் கடுமையாகத் தாக்கிக் கொன்றுவிட்டதாக அவரது பெற்றோரும் உறவினர்களும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், தாக்கிய காவல்துறைக் அதிகாரிகளைக் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், அதன் காரணமாகவே அவரது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கீழே விழுந்த தகவல் உடனடியாகக் காவல் நிலையத்திற்கு வெளியே நின்ற அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் போலீசார் தன்னைத் தலையிலும் உடலிலும் தாக்கியதாக உயிரிழந்த அருணாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் வைத்து மூன்று போலீசார் தன்னைத் தாக்கியதாக அவர் பேசியுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி : 'போலீசார் என்னை தாக்கினர்'... உயிரிழந்த அருணாச்சலம் கொடுத்த வாக்குமூலம்!