சென்னை : முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திருவிழாக்கோலத்துடன் வெளியானது. இது முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசித் திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இதனைக் கொண்டாட்டமாக மாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அவர்கள் தெரிவித்த விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.
படத்தை பார்த்த ஒருவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் " ஜனநாயகன், பலரும் எதிர்பார்த்ததுபோலவே, உண்மையான சினிமா மதிப்பு இல்லாத சோம்பேறித்தனமான முயற்சியாகவே தெரிகிறது. இந்தப் படத்தை ரசிக்க முடிவது, விஜய் ரசிகர்கள் நிரம்பிய ஒரு திரையரங்கில், அவரின் திரையுலக விடைபெறலை கொண்டாடும் மனநிலையுடன் பார்த்தால் மட்டுமே. தனது நடிப்பு வாழ்க்கையின் கடைசி படமாக, இதைவிட சிறந்த ஒரு திரைப்படத்தை விஜய் தேர்வு செய்திருக்கலாம் என்ற ஏமாற்றம் ஏற்படுகிறது.
படத்தில் விஜயின் டைட்டில் கார்டு மற்றும் சில மாஸ் எலிவேஷன் காட்சிகள், குறிப்பாக அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பதை நினைவூட்டும் மெட்டா ரெஃபரன்ஸ்கள் இடம்பெறும் தருணங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. அவற்றைத் தவிர, திரைப்படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் தோல்வியடைகிறது" என கூறியுள்ளார்.
மற்றோருவர் " 3.25/5 மதிப்பெண் வழங்கியுள்ள இந்த விமர்சகர், ஜனநாயகன் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதி ஓரளவு சுமாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய் - மமிதா பைஜு இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகளும், அனிருத் இசையும் படத்தின் மிகப்பெரிய பலம் எனக் கூறியுள்ளார்.
அதேநேரம், பாபி தியோலின் வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், டைட்டில் கார்டு, இடைவேளை மற்றும் போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சிகள் மிகவும் பிடித்ததாகவும், தளபதி விஜயின் திரையுலக விடைபெறலைக் கொண்டாடும் வகையில் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ் "ஜனநாயகன் திரைப்படம் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க மாஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்ததாக பாராட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் வசனங்கள், தளபதி விஜயின் ஸ்டைல், ஸ்வாக், திரை ஆளுமை மற்றும் நடிப்பு வழக்கம்போல வேற லெவலில் இருந்ததாக கூறியுள்ளார். மேலும், இனி விஜயை திரையில் மிகவும் மிஸ் செய்வேன் என்றும், இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவங்களை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து, என்றும் அன்புடன் இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.
3.75/5 மதிப்பெண் வழங்கியுள்ள இந்த விமர்சகர் , ஜனநாயகன் தளபதி விஜயின் திரையுலக பயணத்திற்கு பிரம்மாண்டமான விடைபெறல் திரைப்படமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஜயின் மாஸ், நடனம், சண்டைக் காட்சிகள், வசனங்கள் மற்றும் திரை ஆளுமையை முழுமையாக ரசிக்க முடியும் என்றும், கதையும் திரைக்கதையும் அவரை முன்னிலைப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தளபதி ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் இது ஒரு விருந்து போன்ற படம் என்றும், முழுக்க முழுக்க 'பைசா வசூல்' பொழுதுபோக்கு திரைப்படமாக இருப்பதால் திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளார்.
