கோயில் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி... பின்னணி என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

அர்ச்சனா கல்பாத்தி சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்க்கப்படுவதாகவும், அவர் பல கோயில்களுக்கு தனது சொந்த நிதியில் திருப்பணிகள் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்வதற்காகத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலைத் தயாரித்து வழங்கும் மாநிலக் குழுவின் உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (AGS Entertainment Network) நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முக்கிய நியமனத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தியின் இந்த நியமனத்திற்குச் சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் " இந்த மாநில அறங்காவலர் குழுவைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப முக்கியமான ஒரு பங்கை ஆற்றுகிறது. பத்து லட்சத்திற்கு மேல் வருவாய் இருக்கக்கூடிய கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதில் இக்குழு மிகப்பெரிய பங்காற்றுகிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு இந்தக்குழு ஒரு மிகப்பெரிய உறுதுணையாகச் செயல்படப் போகிறது.

இந்தக் குழுவில் நாம் மொத்தம் ஏழு பேரை நியமித்துள்ளோம். ஆன்மீக ரீதியாகத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்காக மயிலம் ஆதினம் அவர்களைத் தலைவராகப் போட்டிருக்கிறோம். சட்ட ரீதியான வழிகாட்டுதல்களுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை இணைத்துள்ளோம்.

அர்ச்சனா கல்பாத்தி மேடத்தைப் பொறுத்தவரை, அவரை இந்த உலகம் வெறும் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால், இது போன்ற விமர்சனங்களை வேண்டுமென்றே எழுப்பி வருகிறார்கள். எல்லா மனிதர்களுக்கும் பல முகங்கள் உண்டு இல்லையா? உதாரணமாக, நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இன்றைக்கு அரசியல் ரீதியான முகங்கள் இருப்பது போலத்தான், அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும் மற்றொரு முகம் உள்ளது.

அவர் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் தனது சொந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கி பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். அதேபோல, அவருடைய மாமனார் திரு. சீனிவாசன் அவர்கள் ஒரு மிகப்பெரிய தனியார் குழுமத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குப் பல நூறு கோடிகள் செலவு செய்து நிறைய திருப்பணிகளைச் செய்துள்ளார்.

அந்தக் குடும்பத்திலிருந்து கோயில்களுக்குப் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாலும், அந்த நல்லெண்ணம் இருப்பதாலும்தான் அவரை இந்தக்குழுவிற்குள் கொண்டு வந்தோம். இதன் மூலம், கோயில்களுக்குத் தங்களது சொந்த நிதியிலிருந்து நன்கொடைகள் வழங்கி திருப்பணிகள் செய்ய விரும்புபவர்களை ஊக்குவிப்பதற்கான (facilitate) ஒரு சிறந்த முன்னெடுப்பாக இது இருக்கும். இந்தக் குழுவின் செயல்பாடுகள் எதிர்வரும் காலங்களில் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிறப்பாகவும் இருக்கும்"என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.

கோயில் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி... பின்னணி என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!