பூமியை பார்த்தால் இப்படித்தான் இருக்கும்... விண்வெளியில் இருந்து வந்த மெய்சிலிர்க்கும் காட்சி!

நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் விண்வெளியில் இருந்து பூமி, நிலவு மற்றும் ஓரியன் நட்சத்திரக் கூட்டம் தோன்றும் அற்புதமான டைம்-லாப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Hero Image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் (SpaceX Dragon) விண்கலத்தின் ஜன்னல் வழியே தெரியக்கூடிய நமது பூமியின் மெய்சிலிர்க்க வைக்கும் பேரழகையும், விண்வெளியின் இருளில் நிலவு தோன்றும் காட்சியையும் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

விண்வெளியின் அற்புதங்களை எப்போதுமே தன் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் அனில் மேனன், தற்போது வெளியிட்டுள்ள இந்த டைம்-லாப்ஸ் (time-lapse) வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வெளியிடப்பட்டுள்ள இந்தத் துள்ளியமான டைம்-லாப்ஸ் காட்சியில், விண்வெளியின் எல்லையற்ற இருளில் பூமியும் நிலவும் இணைந்து தோன்றும் கண்கவர் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் சுமார் 0:45-வது நொடியில் ஓரியன் (Orion) நட்சத்திரக் கூட்டம் விண்வெளியில் உதிக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம் என்று அனில் மேனன் குறிப்பிட்டுள்ளார். மேலும், டைம்-லாப்ஸ் வீடியோவுக்காகக் காட்சிகளின் வேகம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் எவ்வாறு படமாக்கப்பட்டன என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ள அனில் மேனன், இதற்காக 15 மிமீ லென்ஸ் (15mm lens) பயன்படுத்தப்பட்டதாகவும், அப்பெர்ச்சர் பிரையாரிட்டி (aperture priority) மற்றும் ஆட்டோ ஐஎஸ்ஓ (auto ISO) மோடில் அன்றைய தினம் இந்த அற்புதம் கேமராவில் சிறை பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பூமியையும் பிற அண்டவெளிக் காட்சிகளையும் விண்வெளி வீரர்கள் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் விசித்திரக் காட்சிகள் இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு அரிதான விருந்தாகவே அமைந்து வருகிறது.

அனில் மேனன் பகிர்ந்த இந்தப் பேரழகு வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் தங்களது வியப்பையும் மகிழ்ச்சியையும் கமெண்ட்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.