சென்னை : ஆலந்தூர் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மிகக் காட்டமான, அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் புதிய ஆட்சி த.வெ.க அரசு அமைந்துள்ள சூழலில், வாக்காளர்களின் மனநிலை மற்றும் பனையூர் கட்சி அலுவலக வாசலில் காத்துக் கிடக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறித்து அவர் பேசியுள்ள விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக தொண்டர்கள் மத்தியில் நிலவும் தொய்வை நீக்கும் வகையில் பேசிய தா.மோ.அன்பரசன், தேர்தல் தோல்விக்கான உளவியல் காரணத்தை ஓப்பனாக உடைத்தார். மக்களுக்கு ஒரு ஆறு மாசம் டைம் கொடுத்துப் பாருங்கள். யார் யாரெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போட்டாங்களோ, அவங்களே இன்னும் 6 மாதத்தில் தங்கள் ஊருக்குள் வரும் தவெக எம்.எல்.ஏ-க்களைத் துரத்தியடிக்கப் போகிறார்கள்.
நம்முடைய முதலமைச்சர் கொளத்தூர் தொகுதிக்குச் செய்யாத சாதனைகளா? ஆனால், மக்கள் என்ன நினைத்துவிட்டார்கள்? நம்ம சொந்த வீட்டிலேயே என் பேரனும் பேத்தியும் கூட அங்கதான் ஓட்டு போடச் சொன்னாங்க. 'நம்ம தலைவருக்கு ஒரு ஓட்டுதானே குறையுது, இதனால அவர் தோற்றகவா போகிறார்' என்று நினைத்து எல்லாரும் அலட்சியமாகப் போட்ட ஒரு ஓட்டுதான் இன்று ஒட்டுமொத்தமாக எல்லாரையும் காலி பண்ணிவிட்டது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலக வாசலில் தஞ்சம் புகுந்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் நிலையை மிகக் கொச்சையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், அதிமுகக்காரர்களைப் பார்த்தால் இப்போது எனக்குப் பாவமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் 5 வருடம், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 5 வருடம் எனப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சர்களாக (Ministers) இருந்தவர்களுக்கு அந்தப் பழைய கட்சி மீது கொஞ்சமாவது நன்றி இருக்க வேண்டாமா? உங்களுக்கு முகவரியும் அடையாளமும் கொடுத்ததே அந்த அஇஅதிமுக தானே?
இன்றைக்கு மானம் கெட்டுப்போய், பனையூர் அலுவலக கேட் வாசலில் எப்போது கதவு திறக்கும் என்று நாய் மாதிரி காத்துக் கிடக்கிறார்களே! கேட் திறந்ததும் உள்ளே எப்படி முண்டியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் என்பதை நீங்களே டிவியிலும் செய்திகளிலும் பார்த்திருப்பீர்கள். இவ்வளவு கேவலமான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். என் மீது கேஸ் போட்டாலும் எனக்குக் கவலையில்லை, இதுதான் உண்மை
தேர்தல் பின்னடைவால் திமுக தொண்டர்கள் யாரும் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை என்று உத்வேகப்படுத்திய அவர் " திமுக என்பது சாதாரண காற்றடித்தால் சரிந்துவிடும் கட்சி அல்ல. எத்தனையோ வீழ்ச்சிகளில் இருந்து இந்த இயக்கத்தைத் தூக்கி நிறுத்தியவர்கள் நம்முடைய அடிமட்டத் தொண்டர்கள் மட்டும்தான். அந்த வேகத்தோடு நாம் மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும்.
வருகின்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் (Local Body Elections) நம்மை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை நாம் அடியோடு வீழ்த்த வேண்டும். அதற்கான தேர்தல் வேலைகளை நாம் இன்றிலிருந்தே, இந்த நிமிடத்திலிருந்தே தொடங்க வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
