இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் முன்னாள் தலைவராகவும், ஆன்மீக சொற்பொழிவாளராகவும் இருப்பவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன். இவர் அண்மையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெகு வைரலாக பரவியது. அதற்க்கு பல்வேறு எதிர்ப்புகளும் உருவாகின.
அவர் பேசிய வீடியோவில், அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதவில்லை. அப்படி பெயர் போட வேண்டுமானால் சேர்மன் ராஜேந்திர பிரசாத் பெயரை தான் போட வேண்டும். அதனை விடுத்தது, டைப் அடித்தவர், ப்ரூப் பார்த்தவர் பெயரையெல்லாம் போட கூடாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும், அம்பேத்கர் இந்த ஜாதியை சேர்ந்தவர், பட்டியல் இனதிற்குள் அவர்களே ஒற்றுமையாக இல்லை என பல்வேறு சாதிய ரீதியிலான சர்ச்சை கருத்துக்களை அந்த வீடியோவில் குறிப்பிட்டு கூறினார். திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை. அப்படி ஒரு ஆளே இல்லை எனவும் பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று அதிகாலை 3 மணி அளவில், டி.நகரில் உள்ள ஆர்.பி.வி.எஸ்.மணியனின் வீட்டில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்போகும் போது தான் அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரியவரும்.
