2 எம்.எல்.ஏ-க்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு! வைகோவிடம் முதல்வர் விஜய் சொன்னதென்ன?

திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தன்னை அவமதித்ததாக வைகோ வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்ற அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறியுள்ள நிலையில், தற்பொழுது மதிமுகவும் அக்கூட்டணியை விட்டு நகர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ-க்கள் மதிமுகவிற்கு இருக்கும் நிலையில், திமுகவை வைகோ பொதுக்குழுவில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தான் சந்தித்ததாகவும், தன் அருகே சோபாவில் இடம் இருந்தும் அவர் அமராமல் வேண்டுமென்றே சீமானுடன் பேசிக் கொண்டிருந்தார் என்றும்; அதன்பிறகு தன் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், தான் தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி பட்டினப்பாக்கம் இல்லத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் விரிவாகப் பேசியதாக வைகோ அதிரடித் தகவலை உடைத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, "திமுக கூட்டணியில் வென்ற உங்களது 2 எம்.எல்.ஏ-க்களையும் (MLA) உடனடியாக ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்; அவர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் மீண்டும் இடைத்தேர்தல் வரும்போது நீங்கள் தமிழ்நாட்டில் எங்குச் சொல்கிறீர்களோ, அங்கு வந்து நான் நேரடியாகப் பிரசாரம் செய்கிறேன்.

அந்த இரண்டு உறுப்பினர்களையும் மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என முதலமைச்சர் விஜய் தனக்குத் தீர்க்கமான உத்தரவாதம் அளித்ததாக வைகோ பொதுக்குழு மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

2 எம்.எல்.ஏ-க்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு! வைகோவிடம் முதல்வர் விஜய் சொன்னதென்ன?