மாணவர்களின் கவனத்திற்கு! ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ஜூன் 1ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாகவும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வித்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள், வரும் கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ராஜ்மோகன், “கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 17) வெளியாகவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட முதல் முக்கிய ஆலோசனை இதுவாகும். இந்தக் கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.