சங்ககிரி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சங்ககிரியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாகவும், அதிமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியதாவது:“அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களின் நலனும் காக்கப்படும். 2026-ல் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டில் பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் பாதுகாத்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றால், மக்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.”இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி,“தமிழ்நாட்டுக்கு பாராளுமன்றத் தொகுதி வரையறை 59 ஆக உள்துறை அமைச்சர் அறிவித்துவிட்டார். ஏற்கனவே இருந்த தமிழ்நாட்டின் சதவீதம் 7.18. ஆனால் இது குறைந்துவிடும் என ஸ்டாலின் கருப்பு சட்டை போட்டார். ஆனால் இப்போது 5% உயர்ந்திருக்கிறது. இப்போது சட்டையை கழட்டிக் கொள்ள வேண்டிதானே?” என்று கேள்வி எழுப்பினார்.மேலும் அவர், “அவருக்கு எப்போதுமே இங்கு வந்து நிற்கிற திமுக வேட்பாளருக்கு டெண்டு கொட்டாய் போடுவார்.
பட்டியில் ஆடு மாடுகளை அடைக்கிற மாதிரி மக்களை அடைக்கப் பார்க்கிறார். நல்லா இரும்பு கதவு போட்டு அடைக்கப் போறாங்க. கவலைப்படாதீங்க. இதெல்லாம் ஆட்டுப் பட்டியில்ல. நியாயமான முறையில் ஜனநாயக முறைப்படி மக்களைச் சந்தியுங்கள்” என்று விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து “சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் போட்டு வைத்திருக்கிறாராம். எவ்வளவு தந்திரம்! நான் ஏற்கனவே சொன்னேன். நல்லதுக்கெல்லாம் மூளையைப் பயன்படுத்த மாட்டாங்க. கெட்டதுக்குத்தான் பயன்படுத்துவாங்க” என்றும் கூறினார்.அதிமுக ஆட்சி அமைந்தால் சிறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி பிரச்சினை தீர்க்கப்படும் என்றும், கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை மேலும் பெருக்குவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.சங்ககிரியில் நடைபெற்ற இந்தப் பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
