புதுச்சேரியில் வீடு வீடாகத் தொடங்கியது மக்கள் தொகை கணக்கெடுப்பு!

கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, சரியான தகவல்களைத் தர வேண்டும் என புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hero Image

புதுச்சேரி: 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்ட நடவடிக்கையாக, புதுச்சேரியில் இன்று (ஜூன் 1) முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வீடு தோறும் நேரில் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளனர். இந்த கணக்கெடுப்பின் போது குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், கல்வி, தொழில், வீட்டு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

மொத்தம் 33 கேள்விகள் அடங்கிய படிவத்தின் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள், எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு முக்கிய அடிப்படையாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு பணியாளர்களிடம் பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்கி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வெற்றிகரமாக நடத்த உதவுமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.