தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast showers in 6 districts of Tamil Nadu due to global warming.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை முதல் வருகின்ற மே 29 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரியாகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை, நாகர்கோவில் தானியங்கி, மழைமானி, நாகர்கோவில், முதுகுளத்தூர், ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.