முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் விஜய்.

Hero Image

சென்னை :தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், இன்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார்.

மதியம் முதல் ஸ்டாலின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு உள்ளிட்டோர் வருகை தந்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அங்கு சென்றார்.

விஜய் வருகை தந்ததும், மு.க. ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் அவரை ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இருவரும் பொன்னாடை போர்த்தி பரஸ்பரம் நலம் விசாரித்தனர். முதலமைச்சர் விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு “காலத்தின் நிறம் ‘கருப்பு சிவப்பு’ - திமுக 75” என்ற நூலை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜயும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்து, மு.க. ஸ்டாலினுடன் சிறிது நேரம் உரையாடினர்.

இந்தச் சந்திப்பு இரு தரப்பினரிடையேயும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.தவெக ஆட்சி அமைந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது தமிழக அரசியலில் நல்ல முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!