கோவை: மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமி அடுத்த நாள் குளம் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்த வழக்கில் போலீசார் இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்ற சிறுமி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் பல இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கும் சிறுமி கிடைக்காததால், உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, சிறுமி கார்த்திக் என்ற நபருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையோர முட்புதரில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த உண்மை பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கார்த்திக்குடன் தொடர்புடைய மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து தெரிந்தும் மறைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட கார்த்திக், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். சிறுமி கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
