சென்னை :தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும், நாளை மறுநாள் புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தை தொடர்ந்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தகவலின் படி மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, அக். 27-ம் தேதி உருவாக இருக்கும் மோன்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டணம் – விசாகப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகில் அக். 28ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் அக்.27 மற்றும் 28ம் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும், சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின்படி, 25-10-2025 (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை 26-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
