இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!

இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

bharathiraja thiruchitrambalam

சென்னை :பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பலரும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு இரங்கல் தெரிவித்தனர். பின்னர் பிரபலங்கள் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ததும், பலர் தங்கள் பதிவுகளை அகற்றினர்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இன்று பாரதிராஜா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “பாரதிராஜா மீது உண்மையான மதிப்பு, மரியாதை இருந்தால் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டனர்.

பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு குறைபாடுகளுக்கு அனைத்து பொருத்தமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ நிபுணர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் பாரதிராஜா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது பலருக்கு நிம்மதி அளித்துள்ளது.