சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.“என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்” என்று தொடங்கிய அவர், “இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம்” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் மேலும் தெரிவித்துள்ளதாவது:“நம்பிக்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் ஆதரவு, 22 எதிர்ப்பு, 5 நடுநிலை, 60 பங்கேற்காத நிலையில், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆதரவு தந்த அனைத்து இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்தோம். எதையும் மறைக்கவில்லை, ஒளிக்கவில்லை.தமிழக மக்களே… நீங்கள் பெரும்பாலானோர் நமக்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது தெரியும். சில சூழல்களால் வாக்களிக்க இயலாதவர்கள் இப்போது மனம் வருந்துவதை உணர்கிறோம். இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்.” என தெரிவித்தார்.
திமுக வாதங்களுக்கு பதிலடி
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எழுப்பிய விமர்சனங்களுக்கு விரிவான பதில் அளித்த முதலமைச்சர் விஜய், வாக்கு சதவீதம் குறித்த புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.“தவெக 34.92% (சுமார் 35%) வாக்குகள் பெற்றுள்ளது.
தனித்து நின்ற திமுகவின் வாக்கு சதவீதம் வெறும் 24.19% மட்டுமே. தவெக தனித்து பெற்ற வாக்குகள் 1.72 கோடியே 26 லட்சத்து 209. திமுக தனித்து பெற்ற வாக்குகள் 1.19 கோடியே 29 லட்சத்து 144 மட்டுமே. அதாவது நாங்கள் 53 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.மேலும், “35% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் திமுக 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி” என்றும் சுட்டிக்காட்டினார்.தவெக அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகள் மதச்சார்பற்ற அணுகுமுறை காரணமாக ஆதரவு தந்ததாகவும், அதை திமுக ஏளனம் செய்வதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
நாகரிக அரசியல் வலியுறுத்தல்
அதே சமயமா, “நாங்கள் ஆதாரப்பூர்வமான குறைகளை ஏற்று திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். ஆனால், தோற்ற திமுக இப்போதும் அதே சொத்தை வாதங்களை முன்வைக்கிறது” என்ற முதலமைச்சர், “புஷ்பா அரசு என்று ஏளனம் செய்தாலும், மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே எங்கள் நோக்கம்” என்று வலியுறுத்தினார்.
“மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக செய்து காட்டுவோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருப்போம்” என்று உறுதியளித்த முதலமைச்சர் விஜய், “தி.மு.க. எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை” என்றும் தெரிவித்தார்.இந்தப் பதிவு, நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நேரடியாக விடுத்த முதல் முக்கிய செய்தியாகும். தவெக அரசு தனது பயணத்தை மக்கள் நலன் நோக்கி தொடரும் என்பதை இந்த உரை உறுதிப்படுத்துகிறது.
