கூட்டனியில் எந்த விரிசலும் இல்லை ..மாநாட்டில் திமுகவும் பங்கேற்கிறது ! – திருமாவளவன் அறிவிப்பு.!
இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என திருமாவளவன் தற்போது அறிவித்துள்ளார்.
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதற்கு முன் அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், அக்டோபர்-2 ம் தேதி நடைபெற உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவும் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு தற்போது திருமாவளவன், திமுக இந்த மாநாட்டில் பங்கேற்கிறது என தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
அவர் பேசிய போது, “முதல்வரின் அமெரிக்க சுற்றுப் பயணத்துக்கான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவரிடம் தற்போது தெரிவித்தோம். பல ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக முதல்வரின் பயணம் உள்ளது.
விசிக நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டுக்கான அழைப்பை முதல்வருக்கு அளித்தோம். இந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதல்வர் உறுதி அளித்தார். திமுக கொள்கைதான் மதுவிலக்கு கொள்கை என்றும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கி இருக்கிறேன். அதே போல திமுக-விசிக கூட்டனியில் எந்த விரிசலும் இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. முதல்வருடனான இந்த சந்திப்புக்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”, என திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறி இருந்தார்.