கரூர்: கூட்ட நெரிசல் விபத்திற்குப் பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாக கரூருக்கு வருகை தந்து, இன்று (ஜூலை 10) மதியம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு, தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது உரையில் பதிலடி கொடுத்தார்.
கரூர் சம்பவம் குறித்த வேதனை: "மக்களைச் சந்திப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கினேன். ஆனால், அரியலூர் மற்றும் கரூர் நிகழ்வுகளின் போது காவல்துறையினர் திட்டமிட்டு என்னைத் தவறான பாதையில் அழைத்துச் சென்று, கூட்ட நெரிசலில் சிக்க வைத்தது ஒரு நாடகம்" என்று குற்றம் சாட்டிய அவர், அந்த விபத்தில் உயிரிழந்த மழலைகள் மற்றும் உறவுகளை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார்.
பழியை என் மீது போடுகிறீர்கள்: "விபத்து நடந்ததற்குப் பிறகு, ஒரு அரசியல் ஆதாயத்திற்காகத் தன் மீது பழி போடுகிறீர்கள். சட்டசபையில் ஸ்டாலின் சார் இதைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். எனக்காக வந்த மக்களைக் காக்க வைக்கும் அரசியல்வாதி நான் அல்ல; மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் நான்" என்று அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான போர்: "சென்னையில் பாலம் கட்டுவதில் நடந்த ஊழல், ஒவ்வொரு துறையிலும் நடக்கும் முறைகேடுகள் என அனைத்தையும் தோண்டி எடுத்து வருகிறோம். ஊழல் செய்தவர்கள் எல்லாம் கதறுகிறார்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியைத் தருகிறோம். அரசு அலுவலகங்களில் மக்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்" என்று தனது அரசின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்.
எதிர்க்கட்சிகளுக்கு சவால்: "திமுக (தீய சக்தி) மற்றும் எதிர்க்கட்சிகள் (தீர்ந்து போன சக்தி) கூட்டுக்களவாணிகள். மேகதாது அணை விவகாரத்தில் நான் பேசவில்லை என்று குறை கூறுகிறீர்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் பேசிப் பிரச்சனையை வளர்க்கும் அரசியலைச் செய்ய மாட்டேன். 'Talk less, work more' என்பதே எங்கள் கொள்கை" என்று திட்டவட்டமாகக் கூறினார்
நினைவுச் சின்னம்: "கரூர் நெரிசல் சம்பவத்தில் நமக்கு ஏற்பட்ட இந்த வேதனையை, எதிர்கால சந்ததியினர் மறக்கக்கூடாது என்பதற்காக, கரூர் மண்ணில் தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.
விவசாயிகளுக்காகச் சிறப்புத் தொகுப்பு திட்டம், பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப் படை' மற்றும் வரவிருக்கும் அறிஞர் அண்ணா பிறந்தநாளில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' அறிவிக்கப்படும்" என்று விஜய் உறுதி அளித்தார்.
தனது பேச்சின் இறுதியில், "என்னுடைய ஜனமே எனக்கு முக்கியம். யார் என்ன சொன்னாலும் நான் மக்களை விட்டு ஓடமாட்டேன். வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம், ஆனால் அதிகாரப் பசி கூடாது. வரப்போகும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று நம்பிக்கையுடன் உரையை முடித்தார்.
