டெல்லி : டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கம்பீரத்திற்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான புதிய இந்திய அணி தற்போது மிகக் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. பிரிஸ்டலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரையும் இந்தியா இழந்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 80 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினார். ஆனால், இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி வெறும் 13.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 159 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. அயர்லாந்துக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்திடமும் இந்தியா வீழ்ந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இது ஒரு 'மாற்றக்காலம்' (Transition phase) என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் " இந்தத் தொடர் ஒரு மாற்றக்காலமாக உள்ளது. பல இளம் வீரர்கள் முதல்முறையாக இது போன்ற வெளிநாட்டுச் சூழலில் விளையாடுகிறார்கள். எனவே, தவறுகள் நடப்பது இயல்பு. இந்தத் தவறுகள் மூலம் அவர்கள் கற்றுக்கொண்டு, விரைவில் வலுவான அணியாகத் திரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
நாங்கள் எடுத்த 158 ரன்கள் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. மேலும், பந்துவீச்சாளர்களிடம் ஸ்டம்பிற்கு நேராக (Top of middle and leg) பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டனர்," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
என் ஆட்டம் சிறப்பாக இருந்ததில் மகிழ்ச்சிதான், ஆனால் அணி வெற்றி பெறாத வரை அந்தச் சாதனைகளால் எந்தப் பயனும் இல்லை. என் ஒவ்வொரு ஆட்டமும் அணியின் வெற்றிக்காகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று அவர் மனமுடைந்து பேசினார்.
உலகக்கோப்பை வெற்றியாளராகத் திகழ்ந்த இந்திய அணி, தற்போது ஒரு நிலையான ஆடும் லெவன் அணியைக் கூட உருவாக்க முடியாமல் தடுமாறி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே இந்தியா பலவீனமாகத் தெரிவது, ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சிக்கு பிறகு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு, இந்தியா தனது கௌரவத்தை மீட்டெடுக்குமா என்பது வரும் போட்டிகளிலேயே தெரியவரும்.
