பூத் சிலிப் முதல் அடையாள அட்டை வரை – வாக்காளர்களுக்கு EC அறிவிப்பு!

வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

vote

சென்னை :தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான முழு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் முடிவுகளும் மே 4, 2026 அன்று அறிவிக்கப்படும். தேர்தல் நிறைவு (முடிவுகள் அறிவிப்பு மற்றும் பதவியேற்பு) மே 6, 2026-ஆக இருக்கும்.

தேர்தல் அட்டவணையின் முக்கிய தேதிகள்:

அரசு அறிவிப்பு (Gazette Notification): மார்ச் 30, 2026

வேட்புமனு தாக்கல் தொடக்கம் மற்றும் இறுதி நாள்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை

வேட்புமனு பரிசீலனை (Scrutiny): ஏப்ரல் 7, 2026

வேட்புமனு திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் 9, 2026

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23, 2026

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: மே 4, 2026

இந்நிலையில், தேர்தல் தேதிகளை அறிவித்ததை தொடர்ந்து தற்போது, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்படும். வாக்களிக்கச் செல்லும்போது அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம். புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை போன்றவற்றைக் கொண்டும் வாக்களிக்கலாம்.

வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது அவசியம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) பிரிவு 20A-ன் கீழ் பதிவு செய்திருந்தால், அசல் பாஸ்போர்ட்டைக் காண்பித்து வாக்களிக்கலாம். வேறு எந்த மாற்று ஆவணங்களும் NRI-களுக்கு அனுமதிக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்த அட்டவணை அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் தயாரிப்புகளில் இறங்கியுள்ளன. வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சார திட்டங்கள் ஆகியவை தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தமிழகத்தின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் மிக முக்கிய நாளாக இருக்கும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.