சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த வருடம் 2024 ஜனவரி 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான சின்னத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். இந்த விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்தது, 1996 முதல் 2001 ஆண்டு வரையில் காலகட்டத்தில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வந்தனர் எனக்கு குறிப்பிட்டார்.
முதலீடுகள் சாதாரணமாக வருவதில்லை. ஓர் நல்ல ஆட்சி என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் முதலீடுகள் செய்ய தொழில் முனைவோர் ஆர்வமாக வருவார்கள்.
இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரமானது ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதே இலட்சிய இலக்காக நிர்ணயித்து உள்ளோம். அதனை நோக்கி பல்வேறு முதலீடு மாநாடுகளை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் போது மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
வளர்ச்சி நிறைந்த தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீட்டின் மூலமாகவே தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். தொழில் நிறுவனங்களும் வளரும். தொழில் செய்வதற்கு தமிழ்நாடு சிறந்த சூழ்நிலை கொண்ட மாநிலம். தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த விழாவில் குறிப்பிட்டார்.
