கிடைத்தது கிரீன் சிக்னல்! ஆளுநரை சந்திக்கவுள்ளார் விஜய்?

கேரளம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் பாதை முழுமையாக தெளிவடைந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கழகம் (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் தவெகவுக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளன.இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் சார்பில் வழங்கப்பட்ட ஆதரவுக் கடிதத்தை தவெக பிரதிநிதி ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது.தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன்பின் காங்கிரஸ் (5), சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 116 ஆக உயர்ந்த நிலையில், விசிக மற்றும் IUML ஆதரவுடன் 120 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை (118) இப்போது தவெகவுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று 4-வது முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முயற்சித்தார். பட்டினப்பாக்கத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட விஜய், கிண்டி நோக்கி சென்றார். ஆனால் ஆளுநர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை என தகவல் வெளியானது.

இதனால் விஜய் U-turn அடித்து மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார்.ஆளுநர் மாளிகை தரப்பில், பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஒப்படைக்குமாறு விஜயிடம் செல்போன் மூலம் தொடர்புகொண்டு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், அடுத்த திருப்பமாக கேரளம் செல்லத் திட்டமிட்டிருந்த ஆளுநர் அர்லேகரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதனையடுத்து, ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்கப் புறப்பட்டுள்ளார். ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்களுடன் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார்.