மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று மதுரை மாவட்டத்தில் இரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது . அந்த போட்டியை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் பி மூர்த்தி இருவரும் தொடங்கி வைத்தனர்.
மதுரையில் இன்று காலை நடந்த போட்டியில் பங்கேற்ற, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தினேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
