இலங்கை தமிழர்களுக்கு வீடு ...இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளை கணித்து முன்கூட்டியே வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

TN Assembly

சென்னை :தமிழ்நாடு அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழிநடத்தப்படுவதாகவும், நாட்டிற்கே வழிகாட்டும் கடமையை பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப்பயணம் தொடரும் என்றும், தமிழ்நாடு வரலாறு காணாத வெற்றிநடை போட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்கப்பட்டதால் மகளிர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று நிதியமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளை கணித்து முன்கூட்டியே இத்தொகை வழங்கப்பட்டதாகவும், இத்திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை “இரண்டு மாதங்களில் ரூ.9,000 வரை மகளிருக்கு கொண்டு சேர்த்துள்ளார்” என்று பெருமிதம் தெரிவித்தார்.இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 வீடுகள் கட்டுவதற்கு ரூ.639 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை, திறன்பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு இதுவரை ரூ.486 கோடி செலவிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப்போர் தொடங்கியுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

கடைக்கோடி தமிழரும் வளர்ச்சிப்பயணத்தில் பங்குபெறும் சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களில் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்றுமதி பெருக்கி, பணவீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம், ஐடி, ஜவுளித்துறை, GCC போன்ற பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் தமிழ்நாடு உலக அரங்கில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் என்றும் அவர் கூறினார். நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழ்நாடு செய்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.