தூத்துக்குடி :மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி +2 படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தர்ம முனீஸ்வரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தர்ம முனீஸ்வரன் காயல்குடியைச் சேர்ந்தவர். அவர்மீது ஏற்கனவே 33 குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், 2 பேரை கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
2020-ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் 2022-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றிருந்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் எட்டயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்து இடச் செல்லும்போது மாணவி தனியாக செல்வதை கண்டு பின்தொடர்ந்து, காற்றாலை அருகே மது அருந்திய பிறகு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மதன் இன்று பேட்டியளித்தபோது, “இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணை, சிசிடிவி காட்சிகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த கிராமத்தில் மட்டும் சுமார் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம். விசாரணை தீவிரமாக தொடர்கிறது. மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று எஸ்பி மதன் உறுதியளித்துள்ளார்.
இந்த கைது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் நீதி கிடைத்துள்ளதாக ஆறுதல் அடைந்துள்ளனர். இருப்பினும், வழக்கு இன்னும் விசாரணை நிலையில் உள்ளதால், முழு உண்மைகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு குறித்து தமிழகத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
