தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அளவிலா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M.K. Stalin is proud

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 4, 2025 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற “தமிழ்க் கனவு” நிகழ்ச்சியில், இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். “தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர். தமிழர்கள் எங்கு சென்றாலும் நமது மொழி, பண்பாடு, சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூக நீதி கோட்பாடுகளை விடமாட்டார்கள்,” என்று கூறி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், “நம்மை பிரிக்கும் எல்லாவற்றையும் மறந்து, நம்மை இணைக்கும் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். அயலக தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துரைத்த ஸ்டாலின், “அரசின் அயலக தமிழர் நலன் துறை உங்களுக்காக ஓய்வின்றி உழைத்து வருகிறது. தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடும் உழைப்பாளிகள் என்பதை இங்கிலாந்து மண்ணில் நிரூபித்துள்ளீர்கள்,” என்று பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக, லண்டனில் முன்னணி நிறுவனங்களுடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணம், தமிழ்நாட்டிற்கு உயர்தர சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு வலு சேர்த்தது.இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பும் முன், ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.

இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்த தமிழ்ச் சொந்தங்களுக்கு என் அன்பை நன்றியாக நவில்கிறேன்,” என்று உருக்கமாக பதிவிட்டார்.மேலும், இந்தப் பயணத்தின் போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் “ஸ்டாலின் வாழ்க, தமிழகம் வளர்க” என்று முழக்கமிட்டு, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை ஸ்டாலின் திறந்து வைத்து, தமிழர்களின் சுயமரியாதை இயக்கத்தை உலக அரங்கில் பறைசாற்றினார்.