சென்னை :பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் சி. ராமதாஸ், கட்சியின் தற்போதைய உள் மோதல்களுக்குப் பிறகு புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இது “அய்யா பாமக” என்று அழைக்கப்படும் புதிய கட்சியாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தீயாக பரவிக்கொண்டு இருந்தது.
ராமதாஸ் தன்னுடைய பெயரில் கட்சி தொடங்க முடியாததால், சேலம் மேற்கு எம்எல்ஏ ஆர். அருள் என்ற ஆதரவாளரின் பெயரில் தொடங்கி, பின்னர் கட்டுப்பாட்டை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஊகம், பாமகவின் உள் பிளவுகளை மீண்டும் உயர்த்தியுள்ளது.புதிய கட்சி தொடங்குவதற்கான முதல் நடவடிக்கையாக, 100 பேரிடமிருந்து பிரமாணப் பத்திரங்கள் (affidavits) சேகரிக்கும் பணி தொடங்கியதாக தகவல்கள் பரவியது.
சேலம் அருள், ராமதாஸின் நெருங்கிய ஆதரவாளராக இருப்பதால், அவரது பெயரில் கட்சி தொடங்குவது உத்தியமான நகர்வாகக் இருக்கும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இப்படியான சூழலில், இந்தத் தகவலுக்கு எதிராக, சேலம் மேற்கு எம்எல்ஏ ஆர். அருள் உறுதியாக மறுத்துள்ளார். “2026 தேர்தலில் என் ஆதரவாளர்கள் போட்டியிடுவதற்காக புதிய கட்சி தொடங்குவது போன்ற திட்டமில்லை. இது முற்றிலும் தவறான தகவல்” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அருள், பாமகவின் தற்போதைய தலைமைக்கு எதிராக ராமதாஸ் அணியில் இருந்தாலும், புதிய கட்சி தொடங்குவதில் ஈடுபடவில்லை என்று வலியுறுத்தினார். இந்த மறுப்பு, ஊகங்களை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பாமகவின் உள் மோதல், அன்புமணியின் தலைமைக்கு எதிரான ராமதாஸ் ஆதரவாளர்களின் (அருள் உட்பட) செயல்பாடுகளால் தீவிரமடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
