விஜய்க்கு விசிக ஆதரவா.? முற்றுப்புள்ளி வைத்த திருமா.! “இது இன்னுமொரு படப்பிடிப்பு”

தவெக தலைவர் விஜய் கூறிய கருத்துக்களில் தெளிவில்லை என்றும், இந்த மாநாடு இன்னொரு படப்பிடிப்பு போல இருந்தது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.  முதல் மாநாட்டில் பேசிய அவர், “அவங்க பாசிசம்னா., நீங்க என்ன பாயாசமா.?., குடும்ப ஊழல் ஆட்சி, திராவிட மாடல் என ஏமாற்றுகின்றனர் ” என ஆளும் திமுக அரசை நேரடியாகவே கடுமையாக விமர்சித்தார். மேலும், ஆட்சி – அதிகாரத்தில் பங்கு என்று கூட்டணிக்கும் மறைமுக அழைப்பு விடுத்தார்.

விஜயின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தரப்பில் இருந்து ஆதரவான நிலைப்பாடும், அறிவுறுத்தல்கள் மட்டுமே வந்தது.

விசிகவினர் கருத்து :

அக்கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியில் பங்கு என்ற எங்கள் கோரிக்கை வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. இனி இந்த பாதையில் தான் தமிழக அரசியல் பயணிக்கும்” என கூறியிருந்தார். விசிக எம்பி ரவிக்குமார் , விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் ஆகியோர், விஜய்க்கு பைபிள், குர் ஆன் உடன் சேர்த்து வருணாசிரம கொள்கை பேசும் பகவத் கீதை கொடுக்கப்பட்டுள்ளது குறித்து தங்கள் விமர்சனங்களையும் அறிவுறுத்தல்களையும் முன்வைத்திருந்தனர்.

திருமாவளவன் அறிக்கை :

வெளிப்படையான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கபடாததால் தவெகவுக்கு விசிக மறைமுக ஆதரவு போன்ற நிலைப்பாடே தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதற்கெல்லாம் விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். தனது அறிக்கை வாயிலாக விஜயின் பேச்சில் தெளிவில்லை என்ற வெளிப்படையான  விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

‘முதலில் மாநாடு அடுத்து ஆட்சி பீடம்’

அந்த அறிக்கை மூலம் திருமாவளவன் கூறுகையில் , ” தனது கட்சி ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்பது அவரது சுதந்திரம், நம்பிக்கை, அதற்கு பல படிநிலை மாற்றங்களை கடந்து வர வேண்டும். எடுத்த உடனே உச்ச மாற்றத்தை ஏற்படுத்த  முடியாது என்பது அறிவியல் உண்மை. ‘முதலில் மாநாடு அடுத்து  ஆட்சி பீடம்’ என்பது அசுர வேகத்தை கொண்ட புராண கதைகளில்  வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

விஜயின் நிலைப்பாடு என்ன?

பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என கூறும் அவர், பிளவுவாதம் எனும் பெயரிலான பிரிவினைவாதத்தை ஏற்பதில்லை என்று கூறுகிறார். ஆனால், சங்பரிவாளர்கள் மத வழியில் பெரும்பான்மையாகவும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா எனும் கேள்வி எழுகிறது. குறிப்பாக சிறுபான்மையினரின் வாழ்வுரிமை பாதுகாப்பு குறித்த விஜயின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகிறது.

யாரை எதிர்க்கிறார்.?

பாசிசம் குறித்து அவரது கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. பாசிச எதிர்ப்பாளர்களை கேலி செய்கிறார். அவர் பாசிசத்தை எதிர்க்க வேண்டாம் என்கிறாரா.? அல்லது எதிர்ப்பவர்களும் பாசிசம் தான் என்கிறாரா.? யாரை நையாண்டி செய்கிறார்.? திமுகவையா? காங்கிரஸையா? இடதுசாரியையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார் இயக்கங்களையா? சங்பரிவாளர்களை எதிர்க்கும் இவர்களையா பாசிசம் என விஜய் கூறுகிறார்?

திமுக மட்டுமே குறி :

பாஜக எதிர்ப்பு வேண்டும் என்று கூறுகிறாரா? பாஜகவை எதிர்ப்பது தேவை இல்லை என்பது போல் கூறுகிறாரா.? எதுதான் உங்கள் நிலைப்பாடு.? கூட்டணியில் சேருவதற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறுகிறார். ஆனால், அது உரிய நேரத்தில் கூறப்பட்டதாக தெரியவில்லை. இது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. திமுக எதிர்ப்பதும், திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதுமே அவர் நோக்கமாக இருந்துள்ளது.

இன்னொரு படப்பிடிப்பு :

ஆக்கபூர்வமான நிலைப்பாடுகள் செயல்திட்டங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் ஆஃபர் வெளிப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று அவசரக் கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ என தோன்றுகிறது. ஆஃபர் என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாக தான் இருக்க வேண்டும். ஆனால் டிமாண்ட் என்பது முன்கூட்டியே கூறுவதாகும். அது வெளிப்படை தன்மையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தமாக, பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்த இன்னொரு படபிடிப்பு போல இந்த மாநாடு நடந்துள்ளது.” என தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்த அறிக்கை மூலம், தவெக தலைவர் விஜய்க்கு தற்போது விசிக எந்தவித ஆதரவையும் அளிக்கவில்லை என்பதும், விஜய் கூறிய கருத்துக்களில் உரிய தெளிவில்லை எனவும் திருமாவளவன் தனது அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்