சென்னை :தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் தீவிரமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், கடந்த 7 மணி நேரமாக இது சென்னை, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், இது நாளை அதிகாலை (17-10-2024) புதுச்சேரி-நெல்லூருக்கு இடையில் கரையை கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், ஒரு சில இடங்களில் குறிப்பாக சென்னையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், இன்றைய நாளும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் நேற்று விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயத்துடன் இருந்து வருகின்றனர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளிலும், மீட்புபணிகளிலும் தமிழ்நாடு அரசு ஒருபுறம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சமயத்தில் தற்போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னைக்கு சில நல்ல செய்திகள், சீரான மழை சிறிது நேரம் தொடரும். நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதி வடக்கே என்பதால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம்.
குறிப்பாக, இன்று பெய்தது போல அதி கனமழை நமக்கு பெய்யப்போவதில்லை. சாதாரணமாகவே மழை பெய்யலாம். அது, தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.சென்னையில் 18 மற்றும் 20-ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாகவே இருக்கும்.
இதனால், மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் ஒரு சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது”, என வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டிருந்தார்.
unknown node