நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி கண்டனங்களை தெரிவிக்க காரணமாகவும் அமைந்திருக்கிறது. நேற்று அவர் பேசியது ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் திமுக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்” என கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இதனையடுத்து, அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ” என்னுடைய பேச்சு வருத்தமளித்துள்ள காரணத்தால் நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என எதிர்ப்புகள் கிளம்பியவுடன் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை, அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.
இந்த சூழலில், நேற்றே “தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என பேசியது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்படும்” என எம்பி கனிமொழி நோட்டிஸ் அனுப்பியிருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று தமிழர்களை அவமரியாதையாகப் பேசிய தர்மேந்திர பிரதான் மீது ரிமை மீறல் நோட்டீஸ் திமுக சார்பில் எம்பி கனிமொழி அளித்தார். அது மட்டுமின்றி, மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்களை அவமதிக்கும் வகையில் பேசிய வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடைபெறவிருக்கிறது.