சென்னை :மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகக் கூட்டத்தில் (ஆகஸ்ட் 20, 2025) வெளியிடப்பட்டது.
மல்லை சத்யா, மதிமுகவில் நீண்டகாலமாக முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவர் ஆவார். அவருக்கும், மதிமுக முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. குறிப்பாக, மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு முன்பு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்த கட்சிக் கூட்டங்களில், மல்லை சத்யாவை நீக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.வைகோ, மல்லை சத்யாவை தனது “உடன்பிறவாத் தம்பி” என்று கருதியதாகவும், ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்ததாகவும் கடந்த ஜூலை மாதம் குற்றம்சாட்டியிருந்தார். “மல்லை சத்யா, கட்சியை விட்டு வெளியேறியவர்களுடன் தொடர்பு வைத்து, கட்சிக்கு எதிராக செயல்படுகிறார். இது கட்சியின் ஒழுங்கையும், நற்பெயரையும் பாதிக்கிறது,” என்று வைகோ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக அவர் அறிவித்தார்.இந்த நடவடிக்கை, மதிமுகவில் ஏற்கனவே இருக்கும் உட்கட்சி பூசல்களை மேலும் தீவிரப்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மல்லை சத்யா, நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக “வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றியவன் நான். குடும்ப அரசியலுக்காக எனக்கு துரோகி பட்டம் சூட்டப்படுகிறது,” என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
