ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் பேட்டி.
கடந்த 2021-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் 69-வது ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றார். மதுரை மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பாக நிதி தட்டுப்பாடு, மாநகராட்சி திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கார்த்திகேயன் ஆணையராக பதவியேற்றது முதல் குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு மற்றும் சுகாதார மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார்.
ஆன்லைன் வாயிலாக மாநகராட்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபட்டார். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் உறுப்பினர் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையராக பதவி வகித்து வந்த சிம்ரன்ஜீத் சிங் காலோன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, சிம்ரன்ஜீத் சிங் காலோன் கடந்த 1-ஆம் தேதி மதுரை மாநகராட்சியின் 70-வது ஆணையராக பதவியேற்றார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையின் அழகும், தூய்மையுமே பிரதானம், தூய்மை பணியாளர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும். மேலும், பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மொபைல் செயலி வசதி மேம்படுத்தப்படும் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்றவுடன் அறிவித்துள்ளார்.