“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!
அண்ணாமலை நம்முடன் பயணிக்க போகிறார் எனபதை விட, இனி நாம் அவருடன் பயணிக்க போகிறோம் என்றே கூற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணி , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் என கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்றும் அதிமுக தலைவர்கள் – அண்ணாமலை இடையே சுமூகமான உறவு இல்லை என்றும், நயினார் நாகேந்திரன் முன்னர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி சுமூகமாக இருக்கும் என நயினார் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.
இப்படியான சூழலில் தமிழக பாஜகவில் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், தமிழக பாஜகவில் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையவில்லை என்பதை தமிழக பாஜக நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் அதனை செய்கை மூலம் குறிப்பிட்டு வருகிறது.
நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்வில் பேசிய அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ” திமுக அமைச்சர் ஒருவர் சொன்னார், அண்ணா அறிவாலயத்தில் செங்கலை எடுக்க போகிறேன் என்று சொன்ன அண்ணாமலை எங்கே? அண்ணாமலை பாஜகவின் சொத்து. அவரை யாரும் அசைக்க முடியாது. அண்ணாமலை, என்னிடம் இனி என்னெல்லாம் செய்ய வேண்டும். என பல்வேறு அறிவுரைகளை என்னிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பேசினார். அவர் நம்முடன் பயணிக்க வேண்டும் என்பதை விட, நாம் அனைவரும் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை நான் தெளிவாக சொல்லி கொள்கிறேன். நம் பேச்சை சுருக்கிஉழைப்பை பெறுக்க வேண்டும்.” என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பற்றி பேசினார்.
மேலும் பேசிய அவர், ” திமுக தன்னை தானே அழித்து கொண்டிருக்கிறது. பொன்முடி பேச்சு போதும் திமுக அழிவுக்கு. தமிழக மக்கள் அவர் மீது கொந்தளிப்போடு இருக்கிறார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். திமுக ஆட்சிக்காலம் ஆயுட்காலமாக நெருங்கி கொண்டிருக்கிறது.” எனவும் நயினார் நாகேந்திரன் பேசினார்.