”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தவெக துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார், ”பரந்தூர் மக்களோடு என்றும் தவெக துணை நிற்கும். உரிய நேரத்தில் சட்டப் போராட்டமும் நடத்துவோம், தளபதி மக்களை மக்களாக பார்க்கிறார் ஓட்டுகளாக இல்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார்” என்பதாக கூறினார்.
த.வெ.க, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தவெக-வின் முக்கிய நிர்வாகியின் இந்த அறிவிப்பு, தவெகவின் தலைவர் விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, பாஜகவை “கொள்கை எதிரி” என்றும், திமுகவை “அரசியல் எதிரி” என்றும் தவெக தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இந்த பின்னணியில், பாஜகவுடன் எந்தவித கூட்டணியும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.