கோவையில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் நடத்த அனுமதி இல்லை..!

கோவையில் டிசம்பர் 10ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம்,ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக பல்வேறு அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல் நிகழ்ச்சி, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் எந்தவித முறையான அனுமதியும் பெறாமல் பரப்பி வருகின்றனர். இச்செயலானது கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளது.
கோவை மாநகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் விதமாகவும், தமிழக அரசின் கொரோனா பெருந்தொற்று தடையுத்தரவு அமலில் உள்ளதாலும், இன்று 26.11.2021 முதல் 10.12.2021 வரை எந்தவொரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆர்ப்பாட்டம் / பொதுக்கூட்டம் / ஊர்வலம் / உண்ணாவிரதம் உள்ளிட்ட எந்தவகையான ஆர்ப்பாட்டம் / போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர்களும், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025