மக்களை சந்திக்க வரும் 24ம் தேதி திருச்சியில் மாநாடு எனவும், சென்னை வரும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர், பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பேட்டியளிக்கிறார்.
அவர் பேசுகையில், தொண்டர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை, இன்று அதிமுக ஒரு அரசியல் மாயையில் சிக்கியுள்ளது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி:
சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன், இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறினார். இதற்கு முன்னதாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியே சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
வரும் 24ம் தேதி மாநாடு:
அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள் தான் வழங்கினார்கள். இந்நிலையில், அதிமுக பிரச்சனைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல இருக்கிறோம், வரும் 24ம் தேதி திருச்சியில் மாநாடு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.