சிறு குறு தொழிற்சாலைகள் ஒருநாள் போராட்டம்.! முதல்வர் இல்லத்தில் அமைச்சர் தீவிர ஆலோசனை.!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்தி தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

Tamilnadu CM MK Stalin

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்தி தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என சிறு குறு தொழிற்சாலை நிறுவனங்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஏற்கனவே, உண்ணாவிரத போராட்டம், கடிதம் வாயிலாக கோரிக்கைகளை முதல்வருக்கு தெரிவிக்கும் போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும், சென்னை , கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு குறு தொழிற்சாலைகள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சில சலுகைகளை அறிவித்து இருந்தார். அதில் 12 கிலோ வாட் மின்சாரத்திற்கு குறைவாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு சலுகைகள், சூரிய ஒளி மின்சாரத்திற்காக மேற்கூரை அமைப்பதற்கு 15 சதவீத மூலதன மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

இருந்தும், அதில் சிறு குறு தொழிற்சாலைகள் கூட்டமைப்பினர் வைத்த முக்கிய கோரிக்கையான பீக் ஹவர் (Peak Hour) மின்கட்டணம் ரத்து செய்யப்படாததால் இன்று ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறு குறு தொழிற்சாலைகள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறு குறு நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.