இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!
ஓபிஎஸ் விரும்பினால் வரும் 26-ம் தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே அவருடன் தொலைபேசியில் பேசினேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். இருப்பினும், அவர் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்,” என்று நயினார் கூறினார்.
ஓபிஎஸ்-இன் முடிவு சொந்தப் பிரச்சினையா அல்லது வேறு காரணங்களா என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் மேலும் கூறுகையில், “ஓபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஆகஸ்ட் 26-ல் பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்துவேன். இபிஎஸ்-இன் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டார் என்ற கருத்து தவறானது” எனவும் விளக்கம் அளித்தார்.
மேலும், தொடர்ந்து பேசுகையில் முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது தொகுதிப் பிரச்சினைக்காகவோ அல்லது சொந்தப் பிரச்சினைக்காகவோ இருக்கலாம். ஆனால், என்ன காரணத்துக்காக சந்தித்தார் என்று தெரியவில்லை” என்று விளக்கினார். ஓபிஎஸ்-இன் வெளியேறல் முடிவு குறித்து தனிப்பட்ட காரணங்களை அறியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தால், NDA-வுடனான உறவை மறுபரிசீலிக்க வாய்ப்பு உள்ளது,” என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ஜூலை 31, 2025 அன்று NDA-வில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இந்த முடிவை, ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் அறிவித்தார். “பாஜக தலைமை, ஓபிஎஸ்-ஐ புறக்கணித்துவிட்டது. இதனால் NDA-வில் தொடர அவசியமில்லை,” என்று ராமச்சந்திரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.