இருமல் சிரப் மருந்தில் நச்சுப்பொருள் கலந்திருப்பதால் இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள் இருந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதால் சந்தேகிக்கப்பட்டு இந்த ஆய்வை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுப்பிய ஒரு சுற்றறிக்கை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களும், மருந்து வணிகர் சங்கத்திற்கும் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. அதில் Coldbest PC என்ற இருமல் சிரப் மருந்தில் Diethylene glycol என்ற நச்சுப்பொருள் கலந்து இருப்பதால், இந்த மருந்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டனர். பின்னர் அதை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.