மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி ...!

An IPS officer's petition seeking dismissal of Tony's case seeking Rs 100 crore in damages has been dismissed.

மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கான ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த விவாத நிகழ்ச்சியில் தன்னை குறிப்பிட்டு தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி கிரிக்கெட் வீரர் டோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர் மற்றும் போலீஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் டோனி தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவில் பல தகவல்கள் மறைந்து உள்ளதாகவும், கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் விதமாக டோனி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தொலைக்காட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அது போல டோனியின் இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரும் மனு தாக்கல்  செய்துள்ளார். தற்பொழுதும் சென்னை உயர்நீதிமன்றம் மான நஷ்ட ஈடாக 100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.