மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! காரணம் என்ன?

கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் வேதனையில் உள்ளனர்.

Hero Image

சென்னை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து நான்காவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் புதிய விலை என்ன?

தற்போதைய விலை உயர்வின் படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ரூ.2.57 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.7.20 மற்றும் டீசல் விலை ரூ.7.38 வரை உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் விலை உயர்வு?

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்தது. சில நேரங்களில் 100 லிட்டருக்கு கீழும் விலை சரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த விலை குறைப்பு இந்திய சந்தையில் உடனடியாக மக்களுக்கு பலனாக அமையவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்தியா தனது தேவைக்கான பெரும்பாலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதுதான்.

இந்தியா வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும்போது அமெரிக்க டாலரில்தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது. தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்திருப்பதால், எண்ணெய் வாங்கும் செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூடுதல் சுமையே தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வாக மக்களிடம் பிரதிபலிக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தீர்மானிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கலால் வரி, VAT உள்ளிட்ட பல்வேறு வரிகள் காரணமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் அதன் முழு பலன் மக்களுக்கு கிடைப்பதில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த செய்தி வந்தாலும், இந்தியாவில் உடனடியாக எரிபொருள் விலை குறையாது என்ற நிலை நீடித்து வருகிறது.