சென்னை :தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் கூட்டங்களின்போது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தபோது, அதிமுக தொண்டர்கள் ஓட்டுநரை தாக்க முயன்றனர். ஆம்புலன்ஸில் 5 மாத கர்ப்பிணி மருத்துவ உதவியாளர் ஹேமலதா உள்ளிட்டோர் இருந்தனர்.
இதில், போலீஸார் தலையிட்டு வாகனத்தை விடுவித்தனர், ஆனால் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே கூட்டத்தில், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் நுழைந்ததாகக் கூறி, பழனிசாமி “அடுத்த முறை வெறும் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டுநர் தானே நோயாளியாக மாறுவார்” என்று பகிரங்கமாக அச்சுறுத்தினார். இது “ஆம்புலன்ஸ் அரசியல்” என்று விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய சம்பவங்கள் அதிமுக கூட்டங்களில் மட்டுமல்ல, பொதுவாக அரசியல் கூட்டங்களின்போது ஆம்புலன்ஸ் நுழைவைத் தடுக்கும் முயற்சிகளால் ஏற்படுகின்றன. இதனால் ஊழியர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலை , 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “தமிழக சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை (2026) 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறைக்கு இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து அவசரகால வாகனங்களும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் தடை இல்லாமல் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிப்படுத்த வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அரசுத்தரப்பு கூறியுள்ளது.
