திறக்கப்படாத திருமண மண்டபத்திற்கு சொத்துவரி! உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ரஜினி!

திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ரஜினியின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் மனுவை தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவில், ‘ ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்திற்கு முறையாக சொத்து வரி செலுத்தி வருகிறார். கடைசியாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வரி செலுத்தியுள்ளார். கடந்த மார்ச் 24-ம் தேதி முதல், மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்திய நிலையில், அதன்பின் திருமணம் மண்டபம் காலியாக தான் உள்ளது. யாருக்கும் வாடகை விடவில்லை. முன்பதிவு செய்தவர்களின் பணமும் திரும்ப கொடுப்பட்டது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி, ஏப்ரல் – செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வாரியாக 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்.10 தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது. எனவே காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என எனது மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து, கடந்த செப்.23-ம் தேதி எனது மனுதாரர், சென்னை மாநகராட்சிக்கு நோட்டிஸ் அனுப்பினார். ஆனால்,இதுவரை எந்த பதிலும் வரவில்லை.’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.