6 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் – பட்ஜெட்டில் பெரிய அறிவிப்பு!

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Thangam Thenarasu

சென்னை :தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழிநடத்தப்படுவதாகவும், நாட்டிற்கே வழிகாட்டும் பொறுப்பை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்கப்பட்டதால் மகளிர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார். எதிர்கால தடைகளை கணித்து முன்கூட்டியே இத்தொகை வழங்கப்பட்டதாகவும், இத்திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்திற்கு ரூ.1,889 கோடி செலவிடப்பட்டுள்ளது.இலங்கை தமிழர்களுக்கு உதவும் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் விரிவாக பேசினார்.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முகாம் வாழ் தமிழர்களுக்கு உதவித்தொகை, திறன்பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு இதுவரை ரூ.486 கோடி செலவிடப்பட்டுள்ளது. டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

தொழிலாளர் நலன், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி, உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் என பல்வேறு சாதனைகளை அமைச்சர் எடுத்துரைத்தார். தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களில் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன.

நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழ்நாடு செய்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காக்கள் அமைக்கும் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிவதாகவும், 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.