குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000... காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Hero Image

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்டார்.

தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் “அடிப்படை வருமானத் திட்டம்” (Universal Basic Income) அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும். 300 நாட்களுக்குள் 3 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். குண்டும் குழியும் இல்லாத சாலைகள் உருவாக்கப்படும். சாலை விபத்து மரணங்கள் இல்லாத தமிழ்நாடு மற்றும் ரேபிஸ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். வாகன ஓட்டுநர்களுக்கு வெகுமதி மற்றும் அபராத முறை அமல்படுத்தப்படும்.

துறைவாரியான காலிப் பணியிடப் பட்டியல் வெளியிடப்படும். வெளிப்படையான பணி நியமன கால அட்டவணை உருவாக்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.2030-ஆம் ஆண்டுக்குள் 100% நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படும். 40,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 10,000 பெண் கமாண்டோக்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். காவல்துறை, தீயணைப்புத் துறை, குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு இணையவழி முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும்.

உலகத்தரம் வாய்ந்த “ஒரே” அழைப்பு மையம் (DIAL 100) உருவாக்கப்படும். தமிழகத்தை உலகளாவிய ஆன்மீகச் சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான திட்டங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. முக்கிய வழிபாட்டுத் தலங்களின் வரலாறு மற்றும் ஆன்மீகச் சிறப்பை எடுத்துக்கூறி, பாரம்பரியச் சுற்றுலா, கைவினைக்கலை மற்றும் உள்ளூர் பாரம்பரிய உணவுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். இந்த அறிக்கை தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.