ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு.., கப்பலோட்டிய தமிழன் விருது – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Chief Minister MK Stalin's announcement that a sailing Tamil award with a cash prize of Rs 5 lakh will be given in the name of W. U. Chidambaranar.

வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

அதேபோல் வ.உ.சிதம்பரனார் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் என்றும் சிதம்பரனார் எழுதிய அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில், மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

வ.உ.சி தொடர்பாக, மாணவர்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுளார்.

மேலும், தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும்  நெல்லையில் ம.சு.பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆய்வறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், கோவை வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.