சேலம், தர்மபுரி, 5 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Hero Image

சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20ஆம் தேதியும் தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ஜூன் 21ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும். மேலும் திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் பல இடங்களில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பநிலை சற்று குறையும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானிலையும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம், தர்மபுரி, 5 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு!