“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!
மூக்குத்தியினுள் பிட் கொண்டு சென்று எழுத முடியும் என நம்பும் அரசு வாக்கு பெட்டியை நம்பகமானது என நம்ப சொல்கிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நேற்று தமிழ்நாட்டில் இருந்து நீட் நுழைவுதேர்வு எழுத சென்ற மாணவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நீட் தேர்வு சோதனை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இன்று அவர் பேசுகையில், ” இந்தியா முழுக்க நீட் தேர்வினை மாணவர்கள் எழுதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது? எந்த மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் துப்பட்டாவை இழுக்கிறார்கள்? பூணுலை அறுக்கிறார்கள்?
இங்கு மட்டும் தான் முடியை விரிச்சி விடுகிறார்கள், முழுக்கை சட்டை போட்டிருந்தால் வெட்டி அரைக்கை ஆக்கிவிடுகிறார்கள். உள்ளாடையை எந்த மாநிலத்தில் கழட்டுகிறார்கள்? தேர்வு நடைபெறும் இடத்தில் தேர்வு நடத்தும் மேற்பார்வையாளர்கள் தான் இருக்க வேண்டும், காவல்துறைக்கு அங்கு என்ன வேலை? இதனை மனசான்றோடு யோசிக்க வேண்டும்.
மூக்கு தோடு கழட்ட சொல்கிறார்கள். மூக்குத்திக்குள் பிட் கொண்டு போய் எழுதிட முடியும் என நம்புகிறார்களா? தேர்வு நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமிரா வையுங்கள். தேர்வு கண்காணிப்பாளர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மூக்குத்திக்குள்ள பிட் வச்சி எழுதிடலாம்னு நம்ப சொல்லும் நீங்கள், ஒட்டு போடும் பெட்டிக்குள் ஒண்ணுமில்லை என்பதையும் நம்ப சொல்கிறீர்க்ள்?
அரைஞாண் கயிற்றை அறுக்க சொல்கிறார்கள், பூணுலை அறுக்க சொல்கிறார்கள், தாலியை கழட்ட சொல்கிறார்கள், இதெல்லாம் ஒரு ஜனநாயக நாடா? இந்த நாட்டில் மட்டும் மாணவர்கள் விரும்பிய கல்வியை படிப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? கல்வி மட்டும் ஏன் இந்த நாட்டில் சுகமாக இல்லாமல் சுமையாக இருக்கிறது? ஏன் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது? எந்த கணக்கில் இதனை கொண்டு வருகிறீர்கள்?
வடஇந்தியாவில் இதே நீட் தேர்வு எழுதும்போது புத்தகத்தை விரித்து வைத்து எழுதுகிறார்கள். அங்குள்ள தேர்வு மேற்பார்வையாளர் கதவு பக்கம் நின்று கொண்டு யாரேனும் வருகிறார்களா என பார்த்து கொண்டிருக்கிறார். நான் வேண்டுமானால் அந்த காணொளியை காட்டுகிறேன். ” என நீட் தேர்வு சோதனைகள் குறித்து சீமான் ஆவேசமாக பேட்டியளித்து இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025