இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார்.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான நல்லகண்ணு காலமானார்.

Nallakannu

சென்னை :மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு (வயது 101) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்ரவரி 25, 2026) காலை இயற்கை எய்தினார். கடந்த சில வாரங்களாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் போராடி வந்தார். நேற்றிரவு உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

தோழர் நல்லக்கண்ணு தனது வாழ்நாள் முழுவதையும் சுதந்திரப் போராட்டம் முதல் மக்களின் உரிமைப் போராட்டம் வரை அர்ப்பணித்தவர். சிறைவாசம், தியாகங்கள், ஏழை எளிய மக்களுக்கான தொடர் போராட்டங்கள் ஆகியவற்றால் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் காவலராகவும், தியாகச் சின்னமாகவும் திகழ்ந்தார். “தியாகங்கள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது” என்ற தனது கொள்கையை வாழ்நாள் முழுவதும் நடைமுறைப்படுத்தியவர்.

இரண்டாம் உலகப் போரின் போது உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பத்தினிக் கோட்டம் என்ற இடத்தில் பதுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மீட்டு, அதிகாரிகளின் உதவியுடன் ஏழை மக்களின் பசியைப் போக்கியவர். இத்தகைய மக்கள் நலச் செயல்பாடுகள் அவரது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தன. தமிழக அரசியல் மற்றும் இடதுசாரி இயக்க வரலாற்றில் என்றும் நினைவில் நிற்கும் தலைவராக அவர் போற்றப்படுகிறார்.

அவரது உடல் இன்று மாலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை (பிப்ரவரி 26) மதியம் 3 மணி வரை பொதுமக்களும் கட்சியினரும் அங்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் உடல் வைக்கப்படும். கட்சியினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோழர் நல்லக்கண்ணு அவர்களின் தியாகங்கள் மற்றும் மக்கள் நலப் போராட்டங்கள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.