சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக்கக் கோரி 17 எம்எல்ஏக்கள் சட்டமன்ற செயலரிடம் மனு அளித்துள்ளனர்.மொத்தம் 47 அதிமுக எம்எல்ஏக்களில் இதுவரை 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்துள்ளனர்.
மீதமுள்ள எம்எல்ஏக்கள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.இதேவேளை, எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்ய 30 எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழு தனியாக ஆலோசனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உட்கட்சி பூசலுக்கு மத்தியில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 30 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும், அவர்களில் 8 பேர் அமைச்சர்களாக இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த ஊகங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.வரும் 13ஆம் தேதி புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழு இடையேயான மோதல் அதிமுகவை இரு அணிகளாக பிரித்துள்ளது.இந்த நிலையில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் யார் என்பது குறித்த கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசுக்கு அதிமுகவின் ஆதரவு கிடைக்குமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
